VCK sevak retweeted
திருப்பரங்குன்றம் வழக்கு:
_____________________
உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது!
மதவாத சக்திகள் குழப்பம் ஏற்படுத்துவதற்கு
இது வழிவகுக்கும்!
தமிழ்நாடு அரசு விழிப்போடிருக்க வேண்டும்!
_______________________________
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை!
______________________________
திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இடைக்காலத் தீர்ப்பு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடக்காலத் தடை விதித்திருக்கும் அதே வேளையில், கார்த்திகை தீபம் (நவ-24)அன்று சர்ச்சைக்குரிய 'கல் தூணின்' உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், தேவைப்பட்டால் துணை இராணுவப் படையினரின் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் வழிகாட்டியுள்ளது. இது மாநில அரசை மறைமுகமாக அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கல்தூணில் கட்டாயம் தீபநாளன்று தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் உறுதியாகவுள்ளது என்பதைக் காட்டுகிறது.
எந்த ஆய்வும் செய்யப்படாமலேயே ஆதாரம் ஏதும் இல்லாமலேயே அந்த இடத்தை அல்லது அந்த கல்தூணை தீபம் ஏற்றுவதற்கான இடம்தான் என்கிற தோற்றத்தையும் நம்பிக்கையையும் உருவாக்குவதாக இது அமைந்துள்ளது.
அதே வேளையில், பின்வருமாறும் உச்சநீதிமன்றம் கூறியிருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
அதாவது, “ இந்தக் கல் தூண், வழக்கமான சமய வழிபாட்டு இடமாக இருந்ததோ அல்லது வரலாற்று ரீதியாக அத்தகைய இடமாக இருந்து வந்ததோ என்ற எந்தவொரு கண்டறிதலின் அடிப்படையிலும் தற்போதைய உத்தரவு அமையவில்லை. மேலும், குறிப்பிட்ட அந்த இடத்தில் விளக்கேற்றுவது ஒரு இன்றியமையாத சமயச் சடங்கா என்பதையோ, அல்லது அவ்வாறு செய்வதற்கான சட்டப்பூர்வமாக அமல்படுத்தக்கூடிய உரிமை ஏதேனும் தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ அல்லது சமயப் பிரிவினருக்கோ உள்ளதா என்பதையோ இந்த உத்தரவு தீர்மானிக்கவில்லை" என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
“ நவம்பர் 24 அன்று, 'தீபத்தூண்' என்று அடையாளப்படுத்தப்படும் கல் தூணில், தேவஸ்தானத்தால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு குறிப்பிட்ட குழுவினரைக் கொண்டு, சடங்கு ரீதியான தீபத்தை ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும். அந்தக் குழுவில் யார் இடம்பெற வேண்டும் மற்றும் எத்தனை பேர் இருக்க வேண்டும் என்பதை, கோயில் நிர்வாக அதிகாரி, இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (Archaeological Survey of India) மற்றும் மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் கலந்தாலோசித்து, மதுரை மாவட்ட ஆட்சியர் தீர்மானிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் இதற்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக (Nodal officer) செயல்படுவார். பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு, தீபம் ஏற்றும் நேரத்தையும் அதற்கான பாதையையும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்; சடங்கு முடிந்தவுடன், அந்தக் குழுவினர் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும். அங்கு எந்தவொரு புதிய அமைப்பையும் உருவாக்குவதற்கோ, கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்வதற்கோ, அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கோ அல்லது நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதற்கோ அனுமதி இல்லை. அதேபோல், தர்கா மற்றும் மசூதியின் செயல்பாடுகளில் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது. திருவிழா முடிந்த மூன்று நாட்களுக்குள், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது குறித்த அறிக்கையைச் மாவட்ட ஆட்சியர் சமர்ப்பிக்கவேண்டும்"- என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
'தீபம் ஏற்றுவதற்கு தற்போது வழங்கப்பட்டிருக்கும் அனுமதியென்பது தற்காலிகமானதுதான்; அதனை நிரந்தரமாகக் கருதக்கூடாது'என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும், இது போன்று இரு வேறு மதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இதற்கு முன்பு உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளை வைத்துப் பார்க்கும் போது, இத்தகைய இடைக்கால உத்தரவுகளின்படியே வழக்கின் இறுதிமுடிவுகளும் தீர்மானிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த வழக்கிலும் அப்படியான ஒரு முடிவு தான் வருமோ என்கிற அச்சம் எழுகிறது
தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தீர்ப்பைச் செயல்படுத்தும்போது, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதவாத சக்திகளின் தூண்டுதலின் பேரில், வெவ்வேறு இடங்களில் விளக்கேற்றும் நடைமுறையை ஒரு முன்னுதாரணமாக உருவாக்குவதால் ஏற்படக்கூடிய விளைவுகளைக் கவனமாக ஆராய வேண்டும். இதேபோன்ற ஆணைகள் ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் பிறப்பிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
மேலும், பாரம்பரியமான இடத்தில் விளக்கேற்றும் தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற அடிப்படையில் முதன்மை வழக்கின் தீர்ப்பைப் பெற வேண்டும். அதற்கு மேலும் திறமைவாய்ந்த வழக்கறிஞர்களை வாதாடுவதற்கு அமர்த்திட வேண்டும்
(1/2)
VCK sevak retweeted
(2/2)
மதச் சடங்குகளை நடத்துவது தொடர்பான சர்ச்சைகளை 'ரிட் மனு' (writ petition) மூலம் தீர்க்க முடியாது என்றும், அவை உரிமையியல் வழக்குகள் (civil suits) மூலமே தீர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டும்.
மேலும், இத்தகைய சிக்கல்களை எழுப்புவதற்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து, ஒட்டுமொத்த வழக்கையும் தள்ளுபடி செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இந்த இடைக்காலத் தீர்ப்பை தங்களுக்குக் கிடைத்த வெற்றிபோல சித்தரித்து வன்முறைக்கு வித்திடும் சூழலை உருவாக்க மதவாத சக்திகள் முனையலாம். அத்தகைய முயற்சிகளைத் தமிழ்நாடு அரசு விழிப்போடிருந்து முறியடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்
VCK sevak retweeted
திருப்பரங்குன்றம் அளவைக் கல்லில் தீபம்:
___________________________________
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்புக் குறித்து எமது அறிக்கை- ஒரு திருத்தம் அல்லது விளக்கம்!
____________________________________
திருப்பரங்குன்றம் மலையிலுள்ள 'அளவைக்கல்' எனப்படும் கல்தூணில் கார்த்திகை தீப நாளன்று ( நவ-24) தீபத்தை ஏற்ற வேண்டுமென உச்சநீதிமன்றம் ஒருசில நிபந்தனைகளுடன் இடைக்காலத் தீர்ப்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அத்துடன், தேவைப்பட்டால் 'மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையின்'( CISF ) உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென கூடுதலான அறிவுறுத்தலையும் செய்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் இந்த நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குத் துளியும் உடன்பாடில்லை. இதனை முற்றாக எதிர்க்கிறோம். இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு ஆகும்.
அதேவேளையில், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறமுடியாது என்கிற இக்கட்டுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது உயர் அதிகாரிகள் தள்ளப்பட்டிருப்பதால், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தால், அரசு மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். எனினும், கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்கிற பொருள்படும்படி அறிக்கை அமைந்ததற்கு வருந்துகிறேன்.
நடைமுறை சாத்தியக் கூறுகளிலிருந்து முன்னுணர்ந்து அவ்வாறு சொல்லப்பட்டதேயன்றி வேறில்லை. குறிப்பாக, இது மதவெறிக்கும்பலின் 'வெற்றிக் களியாட்ட வன்முறைக்கு' இடமளித்துவிடக்கூடாதே என்கிற கவலையிலிருந்து சொல்லப்பட்ட கருத்தேயாகும்.
எனவே, இதனை எதிர்மறையாகப் புரிந்துகொள்ள வேண்டாமென, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளுக்கும் எமது நலம்விரும்பிகளான தோழமை சக்திகளுக்கும் தெளிவுப்படுத்த விழைகிறேன்.
வழக்கம்போல நமக்கு எதிராகப் பரப்பப்படும் திரிபுவாதக் கற்பிதங்களைப் பொருட்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்.
*ஜூனியர் விகடன் வார இதழ் தொடர்ந்து எங்கள் தலைவர் திருமாவளவன் அவர்கள் மீது வன்மத்தை கக்குவதை பார்த்தால் எங்கள் தலைவர் திருமாவளவன் அவர்கள் சனாதன எதிர்ப்பில் மிகச் சரியாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.*
@thirumaofficial
VCK sevak retweeted
தமிழ்க்கதிர் மறைவு:
________________
நவம்பர் 26 வரை துக்கம் கடைபிடிக்கும் வகையில் கட்சியின் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடவும்!
நவம்பர் 28 அன்றைக்கு ஆர்ப்பாட்டம் தள்ளி வைக்கப்படுகிறது!
__________________________________
நேற்று (19.11.2026) காலமான கட்சியின் தலைமையகப் பொறுப்பாளர் தம்பி பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களது உடல் அடக்கம் இன்று (20.11.2026) அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், எரவாஞ்சேரி - விளாகம் கிராமத்தில் நடைபெறுகிறது.
அந்த நல்லடக்க நிகழ்வில் இயக்கத் தோழர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் தவறாமல் பங்கேற்று அஞ்சலி செலுத்திட வேண்டுகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமையகப் பொறுப்பாளராகக் கடந்த கால் நூற்றாண்டாகக் களமாடிய தம்பி பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அவர்களின் மறைவையொட்டி 26.11.2016 வரை கட்சியின் சார்பில் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், நவ-24 அன்று நடத்துவதென தீர்மானிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் உட்பட கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, கட்சியின் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாதென இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, நவ- 24 அன்று தொகுதி மாவட்டங்கள் வாரியாக நடத்துவது என மாவட்டச் செயலாளர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தில் (18-11-2026) நிறைவேற்றப்பட்டது.
ஆனால், துக்கம் கடைபிடிக்கப்படும் தற்போதைய சூழலில் அந்த ஆர்ப்பாட்டத்தை 28 -11-2026 அன்றைக்கு நடத்திட வேண்டுமென அறிவிக்கப்படுகிறது.
இவண்:
தொல். திருமாவளவன்,
நிறவனர்-தலைவர்,விசிக.
VCK sevak retweeted
தம்பி தமிழ்க்கதிர் (பி.டி.இரவி) திடீர் மறைவு!
____________________________________
அர்ப்பணிப்புள்ள ஒரு போராளியைப் பறிகொடுத்த பெருந்துயரம்!
ஏற்கவியலாத ஓர் இழப்பாக மனம் பதைக்கிறது!
_____________________________________
கட்சியின் தலைமையகப் பொறுப்பாளர் தம்பி பி.டி. இரவி என்கிற தமிழ்க்கதிர் அதிகாலை 3.00 மணியளவில் காலமானார் என்பதைக் கேட்டுத் திடுக்கிட்டேன்.
திருவாரூர், நன்னிலம் அருகேயுள்ள தனது சொந்த ஊரான விளாகத்திற்கு சென்னையிலிருந்து தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்த அவர், சிதம்பரம் அருகேயுள்ள கொத்தட்டை கிராமத்தில் தேநீருக்காக வண்டி நின்றபோது கீழே இறங்கியிருக்கிறார். சிறிது நேரத்தில் அவருக்கு திடுமென நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவருடன் அதே பேருந்தில்பயணித்த இயக்கத்தோழர் சிவகுமார் அவரைத் தாங்கிப்பிடித்து ஆற்றுப்படுத்தியுள்ளார். வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளியிருக்கிறது. பத்ற்றமான அந்த சூழலில் வண்டியில் வந்தவர்களின் துணையுடன் '108-ஆம்புலன்ஸை'வரவழைத்து அங்கிருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுபோய் சேர்த்துள்ளனர். இரவு பணியிலிருந்த மருத்துவர்கள் அவரைச் சோதித்துப் பார்த்ததில் உயிரில்லை என்பதை அறிந்து ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்பின்னர், கடலூர் நிரபு மற்றும் அவரோடு இருந்த இயக்கத் தோழர்கள் இதனையறிந்து உடனே என்னைத் தொடர்புகொண்டு எனக்குத் தகவல் கூறினர். அதனைக் கேட்டதும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். காணொளி ( வீடியோ)அழைப்பின்வழி தம்பி தமிழ்க்கதிரின் உடலைப் பார்த்தேன். அங்கிருந்த மருத்துவர்களிடம் விசாரித்தேன். அவருக்கு உயர் இரத்த அழுத்தம் அதிகரித்திருக்கலாமென்றும்; நுரையீரலில் நீர்கோர்ப்பு இருந்திருக்கலாமென்றும்; அதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் உயிரிழப்பு நேர்ந்திருக்கலாமென்றும் கூறினர்.
பின்னர், தமிழ்க்கதிரின் மனைவியைத் தொடர்பு கொண்டு நடந்ததைக் கூறி ஆறுதல் சொன்னேன். அவர் கதறி அழுதார். அவரைத் தேற்றுவதற்கு இயலவில்லை. எனினும் அவரை ஆற்றுப்படுத்தினேன்.
நேற்று நாள்முழுவதும் தலைமையகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் எம்மோடு இயக்கப்பணியில் இருந்த தம்பியைத் திடுமென பறிகொடுத்துவிட்டோம் என்பது தாங்கிடவொண்ணா பெருந்துயரத்தை அளிக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் மாநாடுகள், தேர்தல் களப்பணிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் முனைப்புடன் முன்வந்து கூட்டத்தை நெறிப்படுத்தும் சவாலான பணிகளை மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு உள்ள ஒரு போராளி தம்பி தமிழ்க்கதிர்.
நீண்டகாலமாக கட்சியின் தலைமை நிலைய தொண்டரணி பொறுப்பாளராக இருந்தவர். எனது பயணங்களில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டவர். எப்போதும் அயராமல் சுறுசுறுப்புடன் செயலாற்றக் கூடியவர்.
அவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள். இன்னும் படித்துக்கொண்டிருக்கின்ற வயதுள்ள பிள்ளைகள். இந்நிலையில், அவரது மறைவு அவருடைய குடும்பத்திற்கும் இயக்கத்திற்கும் நேர்ந்த பேரிழப்பு. இந்த துயரம் ஏற்கவியலாத ஒன்றாக மனம் பதைக்கிறது.
அவருக்கு இயக்கத்தின் சார்பில் எனது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
#தமிழ்க்கதிர் #வீரவணக்கம்
VCK sevak retweeted
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது.
நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார்.
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார்.
அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார்.
அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விழிப்பாய் இரு!
நெருப்பாய் எழு!!
~ தொல்காப்பியன் திருமாவளவன்.
@thirumaofficial
VCK sevak retweeted
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று சென்னை அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.
திருத்தி எழுதாமல் தீர்ப்பு மாறாது !
திருப்பி அடிக்காமல் தீர்வு கிடைக்காது !
-தொல்காப்பியன் திருமாவளவன்
@thirumaofficial
*கள அனுபவமே தலைமைத்துவத்தின் பள்ளிக்கூடம்!*
எல்லாம் தெரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என்றால், ஒரு காலத்திலும் அரசியலுக்கு வர முடியாது.
களம் தான் நம்மைச் செதுக்கும்! களம் தான் நமக்குக் கற்றுக் கொடுக்கும்! களம் தான் நம்மைத் தலைவனாக்கும்!
தொல்காப்பியன்
@thirumaofficial
15
VCK sevak retweeted
3. நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்திற்கு அலுவலகம்!
மகளிர் விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் சந்தா, நன்கொடைகள் மற்றும் இதர நிதி ஆதாரங்களை முறைப்படுத்தி, வரவு செலவுக் கணக்குகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கணக்குத் தணிக்கை நடைமுறைகளை உறுதிப்படுத்த வேண்டும்.
மகளிர் விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயல்பாடுகள், பயிற்சிகள், ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் இயக்கப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மாநில அளவில் தனி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை உருவாக்கி, அலுவலகத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த மாநில நிர்வாகக்குழு தீர்மானிக்கிறது.
4. மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில மாநாடு!
மகளிர் விடுதலை இயக்கத்தின் மறுசீரமைப்புப் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, புதிய நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கிய பின்னர், இயக்கத்தின் அரசியல் நோக்கங்கள், கொள்கைகள், எதிர்காலச் செயல்திட்டங்கள் மற்றும் பெண்களின் அரசியல் அதிகாரத்தை முன்னிறுத்தும் வகையில் மாநில மாநாடு ஒன்றைச் சிறப்பாக நடத்திட வேண்டும் என இந்த மாநில நிர்வாகக்குழு தீர்மானிக்கிறது.
(3/3)
VCK sevak retweeted
யாழ்ப்பாணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டேன்!
VCK sevak retweeted
யாழ்ப்பாணத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் சிறுவயதில் வாழ்ந்த இல்லத்தை பார்வையிட்டேன்!
VCK sevak retweeted
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையகமான அம்பேத்கர் திடலில் 17.11.2026 அன்று நடைபெற்ற மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில நிர்வாகக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
அரசியல் தீர்மானங்கள்
1. அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதற்கான இலக்கு!
தமிழ்த்தேசிய எழுச்சி மாநாட்டில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள், “ஆளுங்கட்சியாகப் பரிணமிப்போம் என்பதுதான் நம்முடைய அடுத்த இலக்கு” என்று முழங்கினார். தலைவரின் இந்த அரசியல் இலக்கை வென்றெடுத்து, அதை நிறைவேற்றும் வகையில் மகளிர் விடுதலை இயக்கம் தனது களப்பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பெண்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டுதல், இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மக்களிடையே கட்சியின் கொள்கைகளை கொண்டு சேர்த்தல் எனத் திட்டமிட்டுச் செயல்பட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிப்பதற்கான அரசியல் பயணத்தில் மகளிர் விடுதலை இயக்கம் மிகத் தீவிரமாக களப்பணியாற்றுவது என இந்த நிர்வாக குழு கூட்டம் உறுதியேற்கிறது.
2. அண்ணன் சீர் திட்டம்!
தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அண்ணன் சீர் திட்டத்தை இந்த மாநிலச் செயற்குழு பாராட்டி வரவேற்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு ஆண்டு வருமான உச்சவரம்பாக ரூ.2.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் இத்திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இந்த மாநில நிர்வாகக்குழு பாராட்டி வரவேற்கிறது.
3. மகளிர் இடஒதுக்கீடு!
ஒன்றிய பாஜக அரசு மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறைவேற்றிய பிறகும், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னரே அதை நடைமுறைப்படுத்தப் போவதாகக் கூறி வருகிறது. மகளிர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் காலம் தாழ்த்துவதற்கு ஒன்றிய அரசு கூறும் சாக்குப்போக்காகவே இதைக் கருத வேண்டியுள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டைத் தொகுதி மறுசீரமைப்புடன் இணைக்கக் கூடாது என்றும், தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இந்த மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
மத்திய மற்றும் மாநில அமைச்சரவைகளில் பெண்களுக்கு உரிய அளவில் அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும். அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகார அமைப்புகளிலும் பெண்களின் பங்கேற்பும் பிரதிநிதித்துவமும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என இந்த மாநில நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது.
4. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு எதிரான அவமதிப்பு!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி பத்மஜா, ஐ.ஏ.எஸ் அவர்களிடம் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கண்ணியக்குறைவான முறையில் நடந்துகொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அந்தச் சட்டமன்ற உறுப்பினர் கண்ணியக்குறைவான முறையில் நடந்துகொண்டது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த மாநில நிர்வாகக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
5. பெண்களின் பாதுகாப்பு!
தமிழகத்தில் பெண்கள், சிறுமிகள் மற்றும் குறிப்பாகத் தலித் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சாதிய அடிப்படையிலான பாலியல் வன்முறைகள், பணியிடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவற்றை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தகைய குற்றங்களைத் தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதற்கும், குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவதற்கும் தேவையான சட்டங்களை வலுப்படுத்தி, அவற்றைத் திறம்படச் செயல்படுத்த தமிழ்நாடு அரசு பெண்களின் பாதுகாப்புக்காக அமைத்துள்ள ‘சிங்கப் பெண் படை’ இன்னும் தீவிரமாகச் செயல்பட்டு, பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்த மாநில நிர்வாகக்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
(1/2)
VCK sevak retweeted
6. ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச்சட்டம்!
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற உரிய சட்டவரைவு மேற்கொள்வதற்கு நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சாதி மறுப்பு மற்றும் காதல் திருமணங்களைத் தடுக்கும் நோக்கில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளையும், சாதிய வன்முறைகளையும் தடுத்து நிறுத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இணையர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிடவும், இந்த ஆணையத்தின் அறிக்கையை பெற்று உடனடியாக தமிழ்நாடு அரசு ஆணவக்கொலைகள் தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டுமென இந்த மாநில நிர்வாகக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
7. தமிழ்நாடு மகளிர் ஆணையம்!
தமிழ்நாடு மகளிர் ஆணையத்திற்குப் புதிய தலைவரையும் உறுப்பினர்களையும் நியமித்து, அந்த ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசை இந்த மாநில நிர்வாகக்குழுகேட்டுக்கொள்கிறது.
8. கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்!
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மாற்றியமைத்து ஒன்றிய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், அதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், இத்திட்டத்தை நம்பியிருக்கும் கிராமப்புற ஏழைப் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஒன்றிய அரசு இத்திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, கிராமப்புற ஏழைப் பெண்களின் வேலைவாய்ப்புப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று இந்த மாநில நிர்வாகக்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
9. மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு!
மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டால் பெண்கள், குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூக, பொருளாதாரப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத விற்பனையை முற்றிலுமாக ஒழிக்கவும், மதுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், போதை ஒழிப்புக்கான தேசிய அளவிலான கொள்கையை உருவாக்கவும் ஒன்றிய, மாநில அரசுகளை இந்த மாநில நிர்வாகக்குழு வலியுறுத்துகிறது.
அமைப்புத் தீர்மானங்கள்
1. மகளிர் விடுதலை இயக்கத்தின் அமைப்புக் கட்டமைப்பை மறுசீரமைத்தல்!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை, கோட்பாடு மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மகளிர் விடுதலை இயக்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் முகாம் அளவிலான அமைப்புக் கட்டமைப்புகளை மறுசீரமைத்து, இயக்கத்தின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் விரிவுபடுத்த வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த வேண்டும். குறிப்பாக இளம் பெண்கள், கல்லூரி மாணவிகள், உழைக்கும் பெண்கள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்புசாராத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த பெண்களை அதிக அளவில் இயக்கத்தில் இணைக்க வேண்டும் என இந்த மாநில நிர்வாகக்குழு தீர்மானிக்கிறது.
2. நிர்வாகப் பொறுப்பாளர்களின் செயல்பாடுகளை வலுப்படுத்துதல்!
மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாநிலச் செயலாளர்கள் மற்றும் மாநிலத் துணைச் செயலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலங்கள் மற்றும் மாவட்டங்களில் இயக்கத்தின் செயல்பாடுகளைத் திட்டமிட்டு ஒருங்கிணைக்க வேண்டும். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் முகாம் அளவிலான நிர்வாகக் கட்டமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்துவதுடன், பெண்களின் உரிமைகள் தொடர்பான களப்பணிகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
மகளிர் விடுதலை இயக்கம் தேர்தல் காலச் செயல்பாடுகளுக்கு மட்டுமே சுருங்கிவிடாமல், பெண்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளான குடும்ப வன்முறை, பாலியல் வன்கொடுமை, சாதிய ஒடுக்குமுறை, வரதட்சணைக் கொடுமை, குழந்தைத் திருமணம், வேலைவாய்ப்பின்மை, ஊதியப் பாகுபாடு, நிலம் மற்றும் சொத்துரிமை மறுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்கத் தொடர்ந்து போராடும் மக்கள் இயக்கமாகச் செயல்பட வேண்டும் என இந்த மாநில நிர்வாகக்குழு தீர்மானிக்கிறது.
(2/3)































