Pinned Tweet
1994ஆம் ஆண்டு நடைபயணத்தில் ஆரத்தி எடுத்துவிட்டு, ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த தாய் என்னிடம் ₹100 கொடுத்தார்.
“நீங்களே கஷ்டப்பட்ட குடும்பம்… இந்த ₹100 எனக்கு எதுக்கும்மா?” என்று நான் கேட்டபோது, அந்தத் தாய் சொன்ன வார்த்தைகள் என் கண்களை கலங்கச் செய்தன.
ஒரு இயக்கத்தின் உண்மையான பலம் பணமோ, பதவியோ அல்ல… மக்களின் அன்பும், நம்பிக்கையும், தன்னார்வமான ஆதரவும்தான்!
#vaiko #mdmk
தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்,
பாபு அவர்கள் திராவிட இயக்கத்தில் பற்று கொண்டு பணியாற்றி, தி.மு.கழகத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அதன்பின்னர் அண்மையில் 2026 இல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக முன்னாள் முதலமைச்சர் அவர்களை எதிர்த்து, 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் களத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானவர்.
அவர் பிணிவயப்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தமிழக முதல்வர் அவர்கள் பாபு நலம்பெற வேண்டும் என்று விரும்பிய நிலையில், மருத்துவர்கள் எவ்வளவோ உயர் சிகிச்சை தந்தும் அது பலனிக்காமல் உயிர் நீத்தார்.
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு என்று வாழ்க்கை நிலையாமையைப் பற்றி திருவள்ளுவர் குறள் மொழி சொன்னார்.
மரணம் தவிர்க்க முடியாதது என்றாலும், அப்படி உயிரிழக்கின்ற நேரத்தில் மனைவி, மக்கள், உற்றார், உறவினர், பழகிய நண்பர்கள் தாங்க முடியாத துக்கத்திற்கும், துயரத்திற்கும் ஆளாவார்கள்.
சகோதரர் பாபு அவர்களை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களுக்கும், தமிழக வெற்றிக் கழகத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
19.11.2026
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் குரல் கொடுத்த சிவாஜிலிங்கம் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையையும் துயரத்தையும் அளிக்கிறது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை!
சிறுபான்மை மக்களின் மனதில் அவநம்பிக்கை விதைக்கப்பட்டால், அது நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பெரும் ஆபத்தாக மாறும். ஜனநாயகத்தின் ஆணிவேரையே அறுக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத் திருத்தத்தையும், அதன் பாதிப்புகளையும் நாடாளுமன்றத்தில் நான் சுட்டிக்காட்டினேன்.
மதச்சார்பின்மை காப்போம்! ஜனநாயகம் காப்போம்! இந்திய ஒற்றுமையை நிலைநாட்டுவோம்!
#IndianDemocracy #Secularism #Vaiko #POTA #Democracy #socialjustice
பொடா சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்து, விடுதலையான பிறகு நிகழ்ச்சித் தொகுப்பாளர் @Gobinath_C கோபிநாத் அவர்களுடன் “மக்கள் யார் பக்கம்?” நிகழ்ச்சியில் மனம் திறந்து உரையாடிய பழைய நினைவுகளைப் பகிர்கிறேன்.
எனது அரசியல் பயணம், கொள்கை உறுதி, தமிழின உரிமைப் போராட்டங்கள், சிறைவாச அனுபவங்கள், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை எனப் பல்வேறு முக்கியமான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டேன்.
#Vaiko #Gopinath #MakkalYaarPakkam #MDMK #pota #வைகோ
தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஒடுக்குமுறைக்கு எதிராக, அமைதிவழிப் போராட்டங்கள் முடக்கப்பட்ட சூழலில், நெல்சன் மண்டேலா அவர்கள் ANC அமைப்பின் ஆயுதப் பிரிவான ‘ஈட்டியின் முனை’ (MK) உருவாக்கிய வரலாறு!
அதே வரலாற்றுச் சூழலை, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டு நான் நார்வேயின் ஓஸ்லோ நகரில் 2008 இல் ஆற்றிய உரை.
மேகதாது அணைக்கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதா?
கர்நாடக முதல்வர் கட்டவிழ்த்து விடும் கட்டுக்கதை!
கர்நாடக மாநிலம், மைசூருவில் காஸ்மோஸ் கோளரங்கத்தை பிரதமர் மோடி நேற்று (நவம்பர் 13) திறந்து வைத்தார். இந் நிகழ்வில் அம்மாநில முதல்வர் டி.கே.சிவகுமார் பேசும்போது,
"மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம், தெளிவான தீர்ப்பை அளித்து விட்டது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்பட்டே தீரும். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சட்ட ரீதியாக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல்களை மத்திய அரசு தரவேண்டும்.
இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயல்படுவோம். காவிரி விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு கர்நாடகாவுக்கு உதவ வேண்டும்” என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
மேகதாது அணை கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து விட்டதாக கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் மீண்டும் மீண்டும் கட்டவிழ்த்து விடும் கட்டுக்கதை கடும் கண்டனத்திற்குரியது.
கடந்த நவம்பர் 9ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16ஆம் தேதி வழங்கிய தீர்ப்பை மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் எந்த இடத்திலும் கர்நாடகா அணைக்கட்டிக் கொள்வதற்கு அனுமதி அளிக்கவில்லை.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்,
The upper riparian State shall not take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian States."
"மேல்பகுதி (Upper Riparian) மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர்வரத்தைப் பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது."
கீழ்பகுதி மாநிலம் (Lower Riparian), அதாவது தமிழ்நாடுப் பெற்று வரும் காவிரி நீர் வரத்தைத் தடுக்கும் வகையில் மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் தடுப்பணைகளை அமைக்க கூடாது" என்று உறுதிபட தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசின் அனுமதியை வஞ்சகமான முறையில் பெற்று மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக மாநில முதல்வர் டி.கே. சிவக்குமார் முனைந்து இருப்பது அடாவடித்தனமான, சட்டத்தை மீறிய செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசு, கர்நாடக மாநிலத்திற்கு மேகதாது அணை கட்ட ஒப்புதல் அளிக்கக் கூடாது.
தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை விரைவு படுத்த வேண்டும்.
ஒன்றிய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து கர்நாடக மாநில அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
14.11.2026
தமிழக அரசுக்கு பாராட்டு!
வேதாந்தா குழுமம், தொடக்கத்தில் மராட்டிய மாநில அரசின் அனுமதி பெற்று 1993 ஆம் ஆண்டு இரத்தினகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நாசகார நச்சு ஆலையை நிறுவியது. 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை அமைத்து, கட்டிடம் எழுப்பிய நிலையில், இரத்தினகிரி மாவட்ட மாந்தோப்பு விவசாயிகள் பல்லாயிரக்கிணக்கில் திரண்டு ஒரு நாள் பகலில் கடப்பாறை, சம்மட்டி கொண்டு உடைத்து நொறுக்கி தகர்த்தார்கள்.
மராட்டிய மாநில அன்றைய முதல்வர் மாண்புமிகு சரத்பவார் அவர்கள் மூன்றாம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்குக் கொடுத்த லைசென்சை இரத்து செய்தார்.
கோவா மாநிலத்திலும், குஜராத் மாநிலத்திலும் அம்மாநில அரசுகள் அனுமதிக்காததால், 1994 இல் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் சகோதரி ஜெயலலிதா அவர்களைச் சந்தித்து, ஒரே வாரத்தில் லைசென்சும் பெற்று, 15 நாட்களுக்குள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியையும் பெற்று தூத்துக்குடியில் ஆலையை நிறுவியது.
தூத்துக்குடியில் ஆலையை நிறுவத் தொடங்கிய நாளிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக மறியல், உண்ணாநிலை அறப்போர், தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர் ஊராக நடைபயணம், 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களைத் திரட்டி ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை என இடைவிடாது அறப்போராட்டங்களை நடத்தியதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆலையை மூட வேண்டும் என்று கோரி ரிட் மனுவும் தாக்கல் செய்தேன்.
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எலிபி தர்மராவ், பால் வசந்தகுமார் அமர்வு 2010 செப்டம்பர் 28 அன்று ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தீர்ப்பளித்தது.
ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தை அனுகி அதற்கு தடை ஆணை பெற்றது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் 33 வாய்தாக்களில் நானும், வழக்கறிஞர் தேவதாசும் பங்கேற்றோம்.
உச்சநீதிமன்ற நீதியரசர்கள் பட்நாயக், கோகலே அமர்வு ஆலையை நடத்தலாம் என 2013 ஏப்ரல் 2 அன்று தீர்ப்பளித்தது.
பசுமைத் தீர்ப்பாயத்தில் நான் வழக்குத் தொடுத்தேன். வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. அங்கும் நான் வாதாடினேன். நீதியரசர் ஹாரிங்டன் நாரிமன் அவர்களது அமர்வு, சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு அனுப்பியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் மூன்று மணி நேரம் வாதங்களை முன்வைத்தேன். நீதியரசர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் அமர்வு 2020 ஆகஸ்டு 18 அன்று ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது.
வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வால் உலகமகா கோடீஸ்வரர் ஆவார். என்னை எப்படியாவது சந்திக்க வேண்டும் என்று பல முனைகளில் முயன்றபோதும், நான் ஒரு நிமிடம்கூட சந்திக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன்.
தற்போது இந்தியாவில் தாமிரம் தேவை என்று கூறி, தூத்துக்குடியில் உள்ள அதே தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களையும், அந்த நிலத்தையும் பயன்படுத்தி பசுமைத் தாமிர தொழிற்சாலை என்ற பெயரில் ஆலை தொடங்க திட்டமிட்டு வருகிறார்.
ஸ்டெர்லைட் ஆலை நிறுவன உரிமையாளருக்கு எந்த வாய்ப்பும் தரக்கூடாது. தூத்துக்குடி மாவட்டத்தின் சுற்றுச் சூழல் நாசமாகிவிடும் என்று தமிழக முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களை நான் வேண்டிக் கொண்டேன். தற்போது வேதாந்தா குழுமம் திட்டமிட்டுள்ள பசுமைத் தாமிர ஆலைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கவில்லை.
தூத்துக்குடியில் பல ஒப்பந்தக்காரர்களையும், ஆலையால் பயன்பெற்ற பலரையும் தனக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வைத்துள்ளார்.
வேதாந்தா குழுமம் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக தாங்கள் உத்தேசித்துள்ள ஆலைக்கு அனுமதி கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. அவ்வழக்கில் நானும் தலையீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். அதுவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு மே 22 அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சியின் போது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தி ஊர்வலமாகச் சென்றவர்கள் மீது காவல்துறையை ஏவி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடததி, 14 வயது சிறுமி, 30 வயது பெண் உள்ளிட்ட 13 பேரை சுட்டு படுகொலை செய்தது.
காவல்துறையால் நடத்தப்பட்ட இந்தப் படுகொலை தமிழக வரலாற்றிலேயே அப்படி நடைபெறாத ஒன்றாகும் என்பதை மக்கள் கண்காணிப்பகம் நிறுவனர் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள், முன்னாள் நீதிபதிகள், காவல்துறை முன்னாள் அதிகாரிகளைக் கொண்டு 20 நாட்கள் விசாரணையும், ஆய்வும் நடத்தி 2000 பக்கங்கள் கொண்ட அறிக்கையும் தந்துள்ளார்.
அருணா ஜெகதீசன் கமிஷன் பரிந்துரைப்படி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்திற்கும், காயமுற்றோர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
இந்தப் பின்னணியில், முன்பு படுகொலை செய்யப்பட்ட 13 பேர் குடும்பத்திற்கு தலா 25 இலட்சம் ரூபாய் நிவாரணமும், காயமுற்றோர் குடும்பத்திற்கு 5 இலட்ச ரூபாய் நிவாரணமும் தற்போது தமிழக முதலமைச்சர் மாண்புமிகு @CMOTamilnadu ஜோசப் விஜய் அவர்கள் அறிவித்திருப்பது மனிதாபிமான நடவடிக்கை என பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
13.11.2026
#TVKVijay #vaiko #TamilNadu #sterlite
எல்லைகளைக் கடந்த தமிழின உணர்வும், எழுச்சிமிகு உரையும்! உலகத் தமிழர்களின் பேராதரவுடன் 13.04.2008 நார்வே நாட்டின் ஓஸ்லோவில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் எமது உரை!!!
#Vaiko #mdmk #TamilEelam #Norway
தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தி மொழியில் எழுத்துக்கள்; தார் பூசி அழிப்போம்!
தமிழ்நாட்டில் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் எல்லை கற்கள் நடும் பணிகள், பழைய எல்லை கற்களில் வாசகங்களை புதுப்பிக்கும் பணிகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது.
தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி,இந்தி மொழியிலும் ஊர் பெயர் குறிப்பிடப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, தஞ்சாவூர் - சேலம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில், இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை, திருச்சி -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் தமிழ் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் ஊர் பெயர்கள், தூரம் எழுதப்பட்ட போது மறுமலர்ச்சி திமுக மற்றும் அரசியல் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. எங்கள் தோழர்கள் இந்தி எழுத்தைத் தார் பூசி அழித்தார்கள்.
தற்போது மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ,ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில் தமிழ்நாட்டில் மைல் கற்களில் இந்தி மொழியில் எழுதி டெல்லியின் மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுத்திருக்கிறது.
1952ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தேதி தமிழ்நாட்டு தொடர் வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்தார். 600 தொடர்வண்டி நிலையங்களில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டன.
திருச்சி தொடர் வண்டி நிலையத்தில் பெரியார் இந்தியை தார்பூசி அழித்தார். அதே நாளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் தி.மு.க.வும் இதே போராட்டத்தை நடத்தியது.
இந்தி ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு ஒருபோதும் அடிமைப் பத்திரம் எழுதித் தர முடியாது என்பதே 1967ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பின்பற்றி வரும் உறுதியான மொழிக் கொள்கை.
இந்நிலையில் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா வழியில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தஞ்சாவூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல் கற்களில் எழுதப்பட்டுள்ள இந்தி எழுத்துக்களைத் தார் பூசி அழிக்கும் போராட்டத்தை நடத்துகிறது.
நவம்பர் 12ஆம் தேதி கழக உயர்நிலைக் குழு உறுப்பினர் ஆடுதுறை இரா முருகன் தலைமையில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஜி. சரவணன், திருவாரூர் தெற்கு மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், திருவாரூர் வடக்கு மாவட்டச் செயலாளர் காசி. சிவவடிவேலு, நாகை மாவட்டச் செயலாளர் இராமஞ்சேரி ஸ்ரீதர், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொளஞ்சி என்ற சி. சந்திரமோகன் ஆகியோருடன் கழகத்தின் நிர்வாகிகள் தஞ்சை சேலம் தேசிய நெடுஞ்சாலை NH-136 இல் உள்ள மைல் கற்களில் எழுதப்பட்டிருக்கும் இந்தி வாசகங்களை தார் பூசி அழிக்கும் பணியை மேற்கொள்வார்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இதே நிலைப்பாடு தொடர்ந்தால் நவம்பர் 29 ஆம் நாளுக்கு பிறகு எனது தலைமையில் மைல் கற்களில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிக்கும் போராட்டம் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
11.11.2026
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என, பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியிருந்த நிலையில், கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்
“நாட்டின் சட்டத்தைப் பற்றி தமிழக முதல்வர் நன்கு அறிந்திருப்பார் என நம்புகிறேன். மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசு யாரிடமும் அனுமதி கேட்கத் தேவையில்லை. தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 177 டி.எம்.சி. தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையோடு, தனது சொந்த இடத்தில் அணையைக் கட்டுவதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.
கட்சி வேறுபாடின்றி, கர்நாடகத்தில் உள்ள பா.ஜ.க மற்றும் என்.டி.ஏ தலைவர்கள் அனைவரும் மேகதாது விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தைப் பற்றி நேரடியாகப் புரிந்துகொள்ளத் தமிழக முதல்வர், கர்நாடகத்திற்கு ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை கர்நாடகா ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே அணைக் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது என்று கர்நாடக முதல்வர் கூறி இருப்பது மோசடியாகும்.
2018 பிப்ரவரி 16ம் நாள் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு,காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை உறுதி செய்வதாகவே இருக்கிறது.
உச்ச மன்றத்தின் தீர்ப்பு மிகத் தெளிவானது.
"Nothing in the order of this Tribunal shall impair the right or power or authority of any State to regulate within its boundaries the use of water, or to enjoy the benefit of waters within that State in a manner not inconsistent with the order of this Tribunal." (Clause XVIII, Tribunal directions reproduced and endorsed by the Supreme Court)
"இந்தத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், ஒவ்வொரு மாநிலமும் தனது எல்லைக்குள் நீரின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும், அந்த மாநிலத்திற்குள் உள்ள நீரின் பயனை அனுபவிக்கவும் உள்ள அதிகாரம் பாதிக்கப்படாது.
"The upper riparian State shall not take any action so as to affect the scheduled deliveries of water to the lower riparian States."
"மேல்பகுதி (Upper Riparian) மாநிலம், கீழ்ப்பகுதி மாநிலங்களுக்கு அட்டவணைப்படி வழங்க வேண்டிய நீர்வரத்தை பாதிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது."
கீழ்பகுதி மாநிலம் (lower Riparian), அதாவது தமிழ்நாடு பெற்று வரும் காவிரி நீர் வரத்தை தடுக்கும் வகையில் மேல்பகுதி மாநிலமான கர்நாடகம் தடுப்பணைகளை அமைக்க கூடாது என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்சமாகும்.
கர்நாடக மாநிலத்தின் எந்த நடவடிக்கையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த காவிரி நீர்ப் பங்கீடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நீர்வரத்தை பாதிக்கக் கூடாது என்பதே தீர்ப்பின் முக்கியக் கோட்பாடாகும்.
ஆனால் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவகுமார், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக
வஞ்சகமான முறையில்,ஒன்றிய பாஜக அரசின் அனுமதியைப் பெற்று மேகதாது அணையைக் கட்ட முனைந்து இருப்பது கண்டனத்துக்கு உரியது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) தமிழகத்திற்கு வர வேண்டிய காவிரி நீரின் அளவு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களில் வழக்கமாகத் தமிழகத்திற்குப் பெறப்பட வேண்டிய 123.14 டி.எம்.சி நீருக்குப் பதிலாக, வெறும் 44.208 டி.எம்.சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய காவிரி நீரில் சுமார் 79 டி.எம்.சி நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 1974-75 ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த காவிரி நீர்வரத்துகளில் இது 4-வது இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காவிரி நீர் பற்றாக்குறை காரணமாகத் தமிழக டெல்டா பகுதியில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பு கடந்த ஆண்டை விட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.64 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது (அக்டோபர் 5 நிலவரப்படி) வெறும் 1.68 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் 1.27 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையையே தேர்வு செய்துள்ளனர். நீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டே விவசாயிகள் அதிக நீர் தேவைப்படும் பாரம்பரிய நாற்று நடும் முறையைத் தவிர்த்து நேரடி விதைப்புக்கு மாறியுள்ளனர்.
டெல்டாவில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கடலூர் மற்றும் திருவாரூர் ஆகிய இரண்டு மாவட்டங்கள் மட்டுமே தற்போதைய சாகுபடி பரப்பில் 72 சதவீதத்தைக் கொண்டுள்ளன. இதில் கடலூரில் 52,700 ஏக்கரும், திருவாரூரில் 68,400 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில் இறுதியில் மொத்த சாகுபடி பரப்பு 13 லட்சம் ஏக்கரைத் தொட்ட நிலையில், இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ள 12.7 லட்சம் ஏக்கர் இலக்கை எந்த அளவுக்கு எட்ட முடியும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் மேகதாது அணை கட்டப் பட்டால் காவிரிப் படுகை பாலைவனமாக மாறிவிடும் நிலைமைதான் ஏற்படும்.
எனவே தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை துரிதப்படுத்தி , மேகதாது அணைத் திட்டத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
09.11.2026
பேனர்கள் வைக்கக் கூடாது:
அரசியல் கட்சியினர், கலைத் துறையினர், வணிக நிறுவனத்தார், தொழில் முனைவோர், ஆலய வழிபாட்டினர், பொதுநல அமைப்புக்களைச் சார்ந்தோர், திருவிழாக்கள், திருமணங்கள், துக்க நிகழ்ச்சிகள் நடத்துவோர் சாலை ஓரங்களில் பெரிய பெரிய பேனர்கள் வைப்பதனால் பல நேரங்களில் அந்தப் பேனர்கள் கீழே விழும்போது அதில் சிக்கி பலர் படுகாயமுற்றும், சிலர் உயிர் இழப்புக்கும் ஆளானார்கள்.
இதனால் பேனர்கள் வைக்கக் கூடாது என்றும், அப்படி வைத்தால் அபராதமும் தண்டனையும் உண்டு என்று நீதிமன்றங்களும், அரசும் எச்சரித்தும்கூட இந்த பேனர் கலாச்சாரம் அகலாமல் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கின்ற விபரீதம் நேர்ந்து வருகிறது.
அதனால்தான் அண்மையில்கூட அப்படி ஒரு துயர நிகழ்வு ஏற்பட்டுவிட்டது.
நான் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே, நமது இயக்கத்தினர் பேனர்கள் வைக்கக் கூடாது என்று கூறியிருந்தும்கூட ஆர்வமிகுதியால் நம் கழகக் கண்மணிகள் அவ்வப்போது ஆங்காங்கே பேனர்கள் வைத்துவிடுகின்றனர். நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலேயே அதனைக் காண்கிறேன்.
இப்போது திட்டவட்டமாக அறிவிக்கிறேன், எக்காரணத்தை முன்னிட்டும் கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும், தங்கள் இல்ல நிகழ்ச்சிகளாக இருந்தாலும், தாம் வசிக்கும் இடத்தில் உள்ள நிகழ்ச்சிகளாக இருந்தாலும் இனி எங்கும் பேனர்கள் வைக்கவே கூடாது. அதனை மீறி யாராவது பேனர்கள் வைத்தால், அந்த நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுக்க மாட்டேன். இதற்கு மேலும் பிடிவாதமாக கழகத்தினர் யார் பேனர் வைத்தாலும் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
08.11.2026
புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று யுனெஸ்கோவின் சிறப்புமிகு விருதைப் பெற்ற அறிவு ஆசான் தந்தை பெரியார் பெயரில் கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் நடந்துள்ள இமாலய ஊழல் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
சமூகச் சீர்திருத்த இயக்கம் கண்ட தலைவர் பெயரால் அமைந்துள்ள நூலகத்தில் குப்பையில் வீசி எறியப்பட வேண்டிய நூல்களை கொள்முதல் செய்து பகல் கொள்ளை அடித்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது ஆகும்.
இது போன்ற வெட்க கேடான நிகழ்வு உலக வரலாற்றில் இது வரை நடைபெற்றது இல்லை.
அகல்விளக்கு பதிப்பகம்’ என்ற பெயரில் வெளியிட்ட 1,800 நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.
அகல்விளக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ’நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ (ஆசிரியர்: சூர்யா பாலு) என்னும் 300 பக்க நூலின் விலை ரூ. 1,445. அந்த பதிப்பகத்தின் ஒவ்வொரு நூலும் பலமடங்கு அதிக விலையில்தான் இருக்கின்றன. பிற பதிப்பகங்கள் இதே பக்கங்களை கொண்ட நூல்களை ரூ. 350-க்குதான் விற்கிறார்கள்.
தனலட்சுமி அர்ஜுன் என்பவர் எழுதிய ’தமிழ்நாடு ஒரு பார்வை’ நூலில், தமிழ்நாட்டின் முதன்மை முதலமைச்சராக முத்துவேலு சுப்பையா அய்யர் (1947) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அகல்விளக்கு பதிப்பகத்தின் எல்லா நூல்களும் இப்படிதான் இருக்கின்றன.
அகல்விளக்கு பதிப்பகம் போலவே பீனிக்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும் தவறான தகவல்களுடன் நூற்றுக்கும் மேல் இடம்பெற்றுள்ளன.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்களை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்ய பரிந்துரை குழு அமைத்து கடந்த நவ. 5, 2025 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி, இணையவழியில் கூட்டத்தில் நூல் பரிந்துரைக் குழுவில் இடம்பெற்ற 112 உறுப்பினர்கள் கலந்துகொண்டு கொள்முதல் செய்வதற்கான நூல்களை பரிந்துரை செய்யதுள்ளனர்.
இதன் பின்னர், ஜன. 9, 2026 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நூல் தேர்வுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில், 112 நூல் பரிந்துரைக்குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட நூல்களை ஆய்வு செய்யப்பட்டு, கொள்முதல் செய்வதற்கான இறுதிப் பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
பின்னர், பதிப்பகங்களுடன் பேச்சுவார்த்தை, விலை நிர்ணயம் உள்ளிட்ட அடுத்தடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு பிப். 2, 2026 அன்று நூல்களுக்கான கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பெரியார் அறிவுலகத்திற்கு 60,266 நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டன.
திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட பரிந்துரைக் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்கள் என்னென்ன? அதிலிருந்து அரசு இறுதி செய்த புத்தகங்கள் என்னென்ன?
எத்தனை கொள்முதல் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன? ஒவ்வொரு கொள்முதல் ஆணையிலும் எந்தெந்த புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன?
தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படும் புத்தகங்கள் எவை? அவை என்ன விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டது?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் எந்தக் கொள்முதல் ஆணையில் இடம் பெற்றன? எந்த தேதியில் கொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டது?
சர்ச்சைக்குரிய பதிப்பகங்களின் புத்தகங்களுக்கு விலை நிர்ணயம் செய்தது யார்?
அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கான தொகை எந்தெந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது?
இந்தப் பதிப்பகங்களின் உரிமையாளர்கள் யார், யார்? எந்த முகவரியிலிருந்து இயங்குகின்றன?
இவை ஒவ்வொன்றும் எந்தெந்தத் தேதிகளில் நடைபெற்றது?
விஸ்வரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு கடந்த கால திமுக ஆட்சியில் பொறுப்பில் இருந்து இயக்கிய
யோக்கிய சிகாமணிகள் பதில் அளிக்க வேண்டும்.
அறிவுசார் சமூகத்தை உருவாக்க அச்சாணியாக விளங்கும் நூலகத்திற்கு நூல்கள் வாங்கியதில் கொள்ளையடித்தக் கும்பலை கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும்.
பெரியார் அறிவுலகத்தில் இடம் பெற்றுள்ள குப்பை நூல்களை துடைத்து எறிந்து , பகுத்தறிவு பகலவன் பெரியார் பெயரை காப்பாற்ற வேண்டும்.
வைகோ
பொதுச்செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
தாயகம்
சென்னை
7-11-26
காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து அக்டோபர் 29 ஆம் தேதி செல்வழகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், படகு ஓட்டுநர் சூர்யா உள்ளிட்ட 9 மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர்.
அந்தப் படகில், காசிமேட்டைச் சேர்ந்த படகு ஓட்டுநர் சூர்யா 49, குப்பன் 48, மோகன் 47, ராஜேஷ் 52, முருகன் 48, குப்புசாமி 58, விஜயகாந்த் 44, அரவிந்த் 40, கடலூரைச் சேர்ந்த நாராயணன், 57, ஆகியோர் சென்றனர்.
சென்னை கடல் பகுதியில் இருந்து புறப்பட்ட மீனவர்கள், ஆந்திர மாநில கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி ஆந்திர மாநிலம் அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வானிலை ஆய்வு மையம் முரசு புயல் தொடர்பான எச்சரிக்கை விடுத்திருந்தது.
மேலும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வழங்கிய புயல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து, ஆந்திர மாநிலம், நிஜாம்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, புயல் எச்சரிக்கை காரணமாக விசைப்படகை பாதுகாப்பாக ராமயபட்டினம் கடற்கரையில் நிறுத்தி உள்ளனர்.
தொடர்ந்து, மீண்டும் மீன்பிடிக்க சென்ற போது நடுக்கடலில் விசைப்படகின் இன்ஜின் பழுதடைந்துள்ளது. இது குறித்து நவம்பர் 3-ஆம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் அருகிலிருந்த மற்றொரு விசைப்படகிற்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்பிறகு 9 மீனவர்களையும் தொடர்பு கொள்ள முடியாமல் போனது.
இந்நிலையில், மாயமான மீனவர்களை கப்பல் மூலமாகவும் விமானம் மூலமாகவும் தேடும் பணி நடைபெற்று வருவதாக தமிழ்நாடு மீன்வளத் துறை தெரிவித்தது.
“காணாமல் போன விசைப்படகு மற்றும் அதிலுள்ள 9 மீனவர்கள் குறித்த விவரங்களை ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள், மீனவர் சங்கங்கள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்களுக்கு தெரியப்படுத்தவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் ஏதுவாக, தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவிக்க நெல்லூர், ஓங்கோல் மற்றும் விசாகப்பட்டினம் இணை இயக்குநர்களிடம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியக் கடலோரக் காவல்படையின் நிஜாம்பட்டினம் பகுதி கமாண்டன்ட்டிம் இருந்து தொலைபேசி வாயிலாகப் பெறப்பட்ட தகவலின்படி, தேடுதல் பணிக்காக இரண்டு ஹோவர்கிராஃப்ட் (Hovercraft), ஒரு விரைவுப் ரோந்துக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்னை தளத்தில் இருந்து சிறப்புத் தேடுதல் விமானம் அனுப்பப்பட்டு வான்வழித் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிருஷ்ணாப்பட்டினத்தில் இருந்து ஆழ்கடல் கப்பல் அனுப்பப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது“ என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், பிரகாசம் மாவட்டம், கோதாபட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய நான்கு உடல்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்களுடையவை என்பதை மாவட்ட ஆட்சியர் ராஜா பாபு உறுதிப்படுத்திய தகவல்கள் வந்தன.
“தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின்படி, சென்னையில் இருந்து நான்கு குழுக்கள் வெவ்வேறு படகுகளில் மீன்பிடிக்கச் சென்றன. கடலில் புயலின் தீவிரம் அதிகரித்த போது, மூன்று குழுக்கள் பாதுகாப்பாக நெல்லூர் மாவட்டத்தின் ராமயபட்டினம் கடற்கரையில் தங்கள் படகுகளை நிறுத்தின.
அப்போது ஆபத்தான நிலையில் இருந்த நான்காவது குழு, பாபட்லா கடற்கரையிலும் நிஜாம்பட்டினம் கடற்கரையில் தஞ்சம் புகுந்தது.
இந்நிலையில், நிஜாம்பட்டினத்தில் இருந்த மீனவர்கள், ராமயபட்டினத்தில் உள்ள தங்கள் சக மீனவர்களுடன் இணைய விரும்பினர். அப்போது 'முரசு' (Murasu) புயல் வீசிக் கொண்டிருந்த வேளையில், யாரிடமும் தெரிவிக்காமல் மீனவர்கள் ராமயபட்டினத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளனர். அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்பாக இருந்ததாலும், பலத்த காற்று வீசியதாலும் அவர்களின் படகு கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது.
அந்த விபத்து நடந்த போது, அந்தப் படகில் மொத்தம் 9 மீனவர்கள் இருந்ததை தமிழ்நாடு மீன்வளத்துறை முதற்கட்டமாக உறுதிப்படுத்தியுள்ளது. அவர்களில் நான்கு பேரின் உடல்கள் கோதாபட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. மீதமுள்ள ஐந்து பேரின் நிலை என்னவென்று இன்னும் தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. கடலில் மூழ்கிய படகை மீட்க உள்ளூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று ஆந்திர மாநிலம்,பிரகாசம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருக்கிறார்.
இதனிடையே, ஆந்திராவில் ஓங்கோல் கடற்பகுதியில், ஐந்து பேர் உடல் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் மாயமான மீனவர்களின் உறவினர்கள் அடங்கிய குழுவினருடன், தமிழ்நாடு நிதியமைச்சர் மரியவில்சனும் ஆந்திராவிற்கு விரைந்துள்ளார்.
கண்ணுக்கெட்டிய வரை பரந்து விரிந்த கடலுக்குள் புகும் துணிச்சல், தன்னம்பிக்கை, சமயோசிதமான முடிவு, அலையின் வீச்சையும் காற்றின் போக்கையும் கணித்து எதிர்கொள்ளும் உடல்வலு ஆகியவற்றினால் கடலுக்குள் செல்லும் ஒவ்வொரு மீனவரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும்.
மீனவர்களின் கடல்சார் மரபறிவையும் சர்வதேச நவீன அறிவியல் தொழில்நுட்பங்களையும் தகவல் தொடர்புச் சாதனங்களையும் இணைத்து பேரிடர்களை முன்கூட்டியே கணிப்பது, முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, தவிர்க்க முடியாமல் சிக்கிக் கொள்வோரை துரிதமாக மீட்பது, மீண்டும் தொழிலுக்குத் திரும்பும்வரை அவர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான நிவாரணத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவது என ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்படுவது அவசியம் ஆகும்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ஏழு இலட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
முரசு புயலில் சிக்கி உயிரிழந்த காசிமேடு மீனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காணாமல் போன மற்ற மீனவர்களையும் கண்டு பிடிக்க மீன்வளத்துறை நடவடிக்கையை துரிதப் படுத்த வேண்டும்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
06.11.2026
தமிழ் மொழி, இனம், பண்பாடு காக்கவும்
அரசியல் பொருளாதார உரிமைகளை நிலைநாட்டவும்
நவம்பர் 1- தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்!.
தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதியை பெருமைப்ப டுத்திடும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1-ஆம் நாள் ‘தமிழ்நாடு நாள்' என்ற பெயரில் தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதே.
அதேபோல சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 ஜூலை 18 ஆம் நாள் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய நாளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
“நவம்பர் 1 ஆம் நாள் தமிழக மக்கள் கொண்டாடி மகிழ வேண்டிய ‘தமிழ்நாடு நாள்'. 1956 நவம்பர் முதல் நாள் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ் பேசும் மக்களைக் கொண்ட தமிழர் தாயகமாக சென்னை மாகாணம் மறு சீரமைப்புச் செய்யப்பட்டது.
நாடு விடுதலை பெற்றதற்குப் பின்னர் மொழிவாரி மாநில சீரமைப்புப் பற்றி ஆய்வதற்காக 1948 ஜூன் 17 இல் ‘தார்' ஆணையம் அமைக்கப்பட்டது. மொழிவாரி மாநில சீரமைப்பு தற்போது அவசியமில்லை என அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்தப் பரிந்துரை அறிக்கையை காங்கிரஸ் கட்சி சார்பில் வல்லபாய் படேல், நேரு, பட்டாபி சீதாராமையா ஆகியோரைக் கொண்ட ‘ஜேவிபி' குழு ஆய்வு செய்து, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதைக் கிடப்பில் போட்டுவிட்டது.
ஆந்திர மாநிலம் மொழி அடிப்படையில் பிரிக்கப்படும் வரை உண்ணா நோன்பு மேற்கொள்வேன் என்று பொட்டி ஸ்ரீராமுலு அறிவித்து, 1952 அக்டோபரில் போராட்டத்தைத் தொடங்கி, 58 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து, 1952 டிசம்பர் 16 இல் உயிர் துறந்தார். இதனால் பற்றி எரிந்த மொழிக் கனல் பிரதமர் நேருவை உலுக்கியதால், ஆந்திரா எனும் தெலுங்கு மாநிலம் 1.10.1953 இல் மலர்ந்தது.
ஆந்திராவைப் போலவே பிற தேசிய இனங்களும் மொழிவாரி மாநிலங்களாக உருவாகக் குரல் எழுப்பியவுடன், பசல் அலி தலைமையில் மாநில சீரமைப்புக் குழுவை இந்திய அரசு அமைத்தது. இக்குழு 1955, செப்டம்பரில் தனது பரிந்துரையை வழங்கியது. அதன் அடிப்படையில்தான் 1956 நவம்பர் 1 ஆம் நாள் முதன்முதலில் 14 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
சென்னை மாகாணத்தில் இடம் பெற்றிருந்த தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அந்தந்த மொழி மாநிலங்களுடன் இணைக்கப்பட்டன. சென்னை மாகாணம் தமிழ்மொழி பேசும் மக்கள் கொண்டதாக சீரமைக்கப்பட்டது.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போதே தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான சித்தூர், திருப்பதி ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது.
கேரளாவிடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமங்காடு மற்றும் பாலக்காடு போன்ற பகுதிகளையும், கர்நாடகாவிடம் ‘வெங்காலூர்' என்னும் பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்றவற்றையும் இழந்தோம்.
தமிழர்களின் பகுதிகளை அண்டை மாநிலங்களோடு மத்திய அரசு இணைத்துவிட்டதால், நதிநீர் சிக்கல்கள் அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தொடருகின்றன.
தென்மாநிலங்களை இணைத்து தட்சிணப் பிரதேசம் அமைப்பதை எதிர்த்துக் குரல் எழுப்பியவர் பெரியார். பெருந்தலைவர் காமராஜரும் பெரியாரின் கோரிக்கையை ஆதரித்தார்.
மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது தெற்கு எல்லையில் குமரியும், வடக்கு எல்லையில் திருத்தணியும் தமிழகத்தோடு இணைப்பதற்குப் போராடிய தலைவர்கள் முறையே மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., சென்னை மாகாண பெயரை மாற்றி, ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களை தமிழ்நாடு நாளில் நன்றியுடன் நினைவுகூர்வோம்.
1956 இல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதே ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்து ராஷ்டிரா எனும் ஒற்றை தேசமாக இந்த நாடு உருவாக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் சங்பரிவாரங்கள் தொடக்கம் முதலே கூப்பாடு போட்டு வந்தன.
மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மை பலத்துடன் அமைந்தவுடன் இந்தியாவை ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு தொடர்ந்து முனைந்து வருகிறது.
பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தைச் சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தைத் திணித்து, மாநில அதிகாரங்களைப் பறித்து, இந்து ராஷ்டிரம் எனும் கனவை நனவாக்கத் துடிக்கும் இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்துவோம்.
நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பாஜக அரசின் சதித் திட்டங்களை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்.
தமிழ்நாட்டின் மரபு உரிமையையும், மொழி, இன உரிமை மற்றும் மாநில உரிமைகளையும் நிலைநாட்டுவோம்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
31.10.2026
#mdmk #vaiko
உலக ஸ்கேட்டிங் போட்டியில் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்த ஆனந்தகுமார் வேல்குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்!
பராகுவேயில் நடைபெற்று வரும் 2026 உலக ஸ்கேட்டிங் போட்டிகளில், ஆடவர் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், 500 மீட்டர் ஸ்பிரிண்ட் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள சென்னையைச் சேர்ந்த இளம் வீரர் ஆனந்தகுமார் வேல்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
1000 மீட்டர் இறுதிப் போட்டியில் வெறும் நான்கு மில்லி விநாடிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தைத் தவறவிட்டாலும், உலகின் முன்னணி வீரர்களுடன் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது அவரது திறமைக்கும், கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
2021 ஆம் ஆண்டு முதல் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ந்து சாதனைகளைப் படைத்து வரும் ஆனந்தகுமார், கல்வியையும் விளையாட்டையும் ஒருசேர முன்னெடுத்துச் செல்வது மிகுந்த பாராட்டுக்குரியது. அவரது சாதனை, விளையாட்டுத் துறையில் உயர்ந்த இலக்குகளை அடைய விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
இத்தகைய திறமையான இளம் வீரரை உருவாக்குவதில் உறுதுணையாக இருந்த அவரது பெற்றோர், குடும்பத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் அவருக்குத் துணைநின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கும், திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் அளித்து வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய் @CMOTamilnadu அவர்களுக்கும், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா @AadhavArjuna அவர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக, விளையாட்டுத் துறையில் அனுபவம் கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களின் முயற்சிகளும், தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளும், நகர்ப்புறங்களைத் தாண்டி கிராமப்புறங்களில் உள்ள திறமையான இளைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும். ஆனந்தகுமார் போன்ற வீரர்களின் சாதனைகள் தனிப்பட்ட வெற்றிகளாக மட்டுமின்றி, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த பல நூறு இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் சாதிப்பதற்கான ஊக்கமாகவும் அமைய வேண்டும்.
திறமையும் ஆர்வமும் கொண்ட ஒவ்வொரு இளைஞருக்கும், அவர்களின் பொருளாதாரச் சூழலைப் பொருட்படுத்தாமல் உரிய பயிற்சியும் வாய்ப்புகளும் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.
அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மாரத்தான் போட்டியிலும் ஆனந்தகுமார் சிறப்பாகச் செயல்பட்டு மேலும் ஒரு பதக்கத்தை வெல்லவும், எதிர்காலத்தில் சர்வதேச அரங்கில் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கவும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வைகோ
பொதுச் செயலாளர்,
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
#vaiko #mdmk #AnandkumarVelkumar
வீரத்தின் விளைநிலம் பாஞ்சாலங்குறிச்சி!
விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத தடம் பதித்த பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் 277-ஆவது நினைவு நாளில், கயத்தாறில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து என் புகழ் வணக்கத்தைச் செலுத்தினேன்.
அந்நிய ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்த அவரது நெஞ்சுரமும், தாய்மண்ணின் உரிமைக்காக அவர் செய்த தியாகமும் தலைமுறைகள் கடந்து தமிழர்களுக்கு ஊக்கமளிக்கும்.
42-ஆம் ஆண்டு அன்னதானத்தையும் தொடங்கி வைத்தேன்.
கட்டபொம்மனின் புகழ் வாழ்க! தமிழர் வீரம் ஓங்குக!
#வீரபாண்டியகட்டபொம்மன்
தேர்தல் ஜனநாயகப் படுகொலையைக் கண்டித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் சென்னையில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் @manickamtagore மாணிக்கம் தாகூர் எம்.பி., அமைச்சர் @imrajmohan ஆ. ராஜ்மோகன், விசிக தலைவர் @thirumaofficial தொல். திருமாவளவன் எம்.பி., இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்பினர்.
ஜனநாயகம் காக்கப் போராடுவோம்! மக்கள் உரிமைகளை நிலைநாட்டுவோம்!
#mdmk #vaiko #INDIAAlliance #ResignGyanesh












